நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேவுள்ள கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (42). இவர் அதே பகுதியிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகள் இன்சிகாவுடன் (3) வயல்வெளி பகுதியிலுள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியில் உள்ள பனைமரமொன்றில் கூடு கட்டியிருந்த கதண்டு என்றழைக்கப்படும் விஷவண்டு திடீரென்று அப்பகுதியில் செல்வோரை தாக்கியது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மகள் இருவரையும் கடித்துள்ளது. இதில் காயமடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிறுமி இன்சிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட ஆனந்தகுமாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு சங்கரி (36) என்ற மனைவியும், பவித்ரா (5) என்ற மற்றொரு மகளும் உள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகள் இருவரும் விஷவண்டு தாக்கி உயிரிழந்தது கடலங்குடி கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, விஷவண்டு தாக்குதலில் காயமடைந்த மேலும் 3 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.