நாகை மாவட்டத்தில் தற்போது குறுவை பயிர்கள் அறுவடை தீவிரமாக நடைபெற்றுவருகின்றது. நேற்று பெய்த மழை காரணமாக, வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், முற்றிய நெல்பயிர்கள் தூறுடன் கீழே சாய்ந்துவிட்டன. இதையடுத்து, அறுவடை பணிகள் இயந்திரங்கள் மூலம் நடைபெற்றுவரும் நிலையில், வயலில் தண்ணீர் சேர்ந்து, சேறாக உள்ளதால் இயந்திரங்கள் வயலில் இறங்கி அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது.
மேலும், வயல் காய்ந்து அறுவடை பணிகள் செய்ய இன்னும் ஒருவார காலம் பிடிக்கும். தொடர்ந்து மழை பெய்தால் சாய்ந்த நெற்கதிர்கள் வயலிலேயே முளைத்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் அறுவடை செய்ய ஒரு மணி நேரம் தேவைப்படும். இதற்காக ஒரு மணி நேரத்திற்கு அறுவடை இயந்திரம் 2 ஆயிரம் ரூபாய் வாடகையாக வசூல் செய்யப்படுகின்றது. கீழே சாய்ந்த பயிர்களை அறுவடை செய்ய ஒரு ஏக்கருக்கு 3 மணி நேரம் பிடிக்கும் என்பதால், விவசாயிகள் கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. இது மட்டுமின்றி, ஈரப்பதம் காரணமாக 25 விழுக்காடு மகசூல் இழப்பும் ஏற்படுகின்றது.
இதையடுத்து அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாகை மாவட்டத்தில் 41 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. சிறிய ரக நெல் ரூ.1,140 கொள்முதல் செய்யப்படும் நிலையில், கிலோவிற்கு ரூ.5 வரையில் வெளி மார்க்கெட்டில் விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளனர். அதாவது வெளி மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரையில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகின்றது.
எனவே, அரசு உடனடியாக கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து ஈரப்பதம் கட்டுப்பாடின்றி, நெல்லை கொள்முதல் செய்தால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து மீண்டு குறுவை சாகுபடியில் ஈடுபடமுடியும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.