நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் தேசிகர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் ஏழை விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய நிலம் பிரித்து வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் இன்று வரை விவசாயிகள் சாகுபடியை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் நடப்பாண்டில் 66 விவசாயிகளுக்கு சிட்டா-அடங்கல் வழங்காததால், வலிவலத்தைச் சேர்ந்த விவசாயிகள், இன்சூரன்ஸ், விவசாயக் கடன், விவசாய நகைக் கடன் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த் துறை அலுவலர்களிடம் அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் தங்களுக்கு சிட்டா-அடங்கல் வழங்கவில்லை என்றால் தாங்கள் திருக்குவளை தாலுகா அலுவலகத்தை விட்டு வெளியே போவதில்லை என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.