மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோயில் ஆகிய 4 இடங்களில் வேளாண் விற்பனைக்குழு சார்பில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மயிலாடுதுறை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் சாகுபடி செய்த பருத்தியை கொண்டு வந்து இங்கு நடைபெறும் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில், குத்தாலம் பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான கடந்த அக்டோபர் மாதம் நடந்த மறைமுக ஏலத்தில், விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பருத்தியை விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில், ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே பருத்திக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மற்ற விவசாயிகளுக்கு பணம் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை. எனவே, விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு வந்து வந்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பணத்தை கேட்டும் சென்றுள்ளனர். அதற்கு அதிகாரிகள் இரண்டு நாட்களில் இல்லையென்றால், ஒருவார காலங்களில் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அலட்சியமாக கூறி அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தங்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை என சுமார் ரூ.1 கோடியே 38 லட்சம் வரை பணம் வர வேண்டி உள்ளது எனக் கூறி அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே, பருத்தி ஏலம் விற்பனை செய்ததற்கான டோக்கன்களுடன் இன்று (டிச.4) குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் பணம் எப்போது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கேட்டு அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி கலைமணி, பருத்தி விவசாயிகளுக்கு சுமார் ரூ.80 லட்சம் வரை கொள்முதல் செய்த பருத்திக்கான தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும், ஆகவே அரசு விரைந்து விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த குத்தாலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று கூறியதை அளித்து தற்காலிகமாக விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: "கேப்டனுக்காக எனது உடல் உறுப்புகளை தானமாக தருகிறேன்" - முகநூல் பக்கத்தில் கூலித் தொழிலாளி கண்ணீர் பதிவு..!