நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் இந்தாண்டு 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு, தற்பொது அறுவடை நடைபெற்றுவருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இச்சூழலில் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை, சாக்கு பைகள் தட்டுப்பாடு ஆகிய காரணங்களைக் கூறி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் 20 நாள்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகள் மீது அமர்ந்துகொண்டு, உடனடியாக தாங்கள் கொண்டுவந்துள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த வேதாரண்யம் வட்டாட்சியர் சண்முகம் விவசாயிகளுடன் பேச்சுவார்தை நடத்தி, நாளை முதல் கூடுதலாக ஊழியர்களை நியமித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டனர்.