காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருவாரூரில் நடைபெறும் மாநாட்டுக்கு சீர்காழியில் விவசாயிகள் அழைப்புக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது, ”தமிழ்நாடு அரசானது காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தும் அரசாணை பிறப்பித்துள்ளது.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வருகிற 7ஆம் தேதி திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்து விவசாயிகளும் பாராட்டு விழா நடத்தவுள்ளனர். அதில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க இருக்கின்றனர். நாகையில் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சிப்பத்திற்கு ரூ.40 ரூபாய் வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அது உண்மைதான், அதற்கு விவசாயிகள்தான் பொறுப்பேற்கவேண்டும்.
இணையதள பணப் பரிவர்த்தனை மூலமாகத்தான் விவசாயிகளுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது. எனவே ஒவ்வொரு கிராமத்திலும் வருவாய் கிராமம் அடிப்படையில், விவசாயிகள் குழு ஒன்று அமைத்து ஒட்டுமொத்த விவசாயிகள் குழுவும் ஒன்று சேர்ந்து நெல் சிப்பத்திற்கு அதிகமாக பணம் கேட்பவரையும், பணம் கொடுப்பவரையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தக் குழு அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தலைவரை நியமிக்க வேண்டும்' - பி.ஆர். பாண்டியன்