மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் வட்டாரத்தில் 15 அயிரத்து 815 ஹெக்டேர் சம்பா தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நிவர், புரெவி புயல் கனமழை காரணமாக 11 ஆயிரத்து 645 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கியதினால் விவசாயிகள் கவலையடைந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நல்லாடை கிராமத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வங்கிகள் மூலம் வரவு வைக்கப்பட்ட நிலையில், திருவிடைக்கழி லட்சுமி விலாஸ் தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ள இலுப்பூர், விசலூர் ஆகிய ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 240 விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணத் தொகை வராததை கண்டித்து சங்கரன்பந்தல் மெயின் ரோட்டில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலுப்பூர் கிராம தலைவர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு நிவாரண தொகை வழங்க கோரி முழக்கமிட்டனர். தகவலறிந்த வந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் மற்றும் பொறையார் காவல் துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் சாலைமறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: அலகுமலை ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகளும், அடக்க முயலும் காளையர்களும்!