நாகப்பட்டினம் (மயிலாடுதுறை): நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள கிராமங்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையிலும், கிராமங்களை தூய்மையாக வைத்திருக்க விழிப்புணர்வு பாடல்களைப் பாடியும் தொடர்ந்து கிருமி நாசினி தெளித்து வருகிறார் விவசாயி பன்னீர்செல்வம் (68). இவர் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆவார்.
பொதுசேவை செய்வதில் மிகுந்த அக்கறைக்கொண்ட இவர், தனது சொந்த செலவில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக மஞ்சள் தூள், துளசிப்பொடி, வேப்பிலைச்சாறு அடங்கிய கிருமிநாசினி நீரை. வேலம்புதுக்குடி, கொத்தங்குடி, பனங்குடி, அரும்பாக்கம், நெய்வாசல் உள்ளிட்ட கிராமங்களில் வீடுவீடாகச் சென்று, தனது முதுமையான வயதிலும் தினந்தோறும் அதனைத் தெளித்தும், கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வுவை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியும், பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தி வருகிறார். இவரது இச்செயலல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று (மே.19) இவர் வாடகை டாடா ஏசி வாகனத்தில் இரண்டு பெரிய பேரல்களில் கிருமிநாசினியை எடுத்து சென்று சில சிறுவர்கள், இளைஞர்கள் உதவியுடன் ”கரோனா தொற்றை விரட்டுவோம்” என்ற விழிப்பணர்வு பாடலுடன் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி நீரைத் தெளித்தார்.
இது குறித்துப் பேசிய அவர், மக்கள் நலனுக்காக இச்செலவை செய்வதாகவும், தொடர்ந்து இப்பணியில் ஈடுபடுவதாகவும், கடந்த ஆண்டும் கரோனா தொற்றின்போதும் கிருமிநாசினி தெளித்ததாகவும் சேவை மனப்பான்மையோடு கூறுகிறார் விவசாயி பன்னீர்செல்வம்.
இதையும் படிங்க: கரோனா தொற்று: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!