மயிலாடுதுறையை அடுத்த மூங்கில் தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 48). விவசாயியான இவருக்கு கவிதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், இன்று (செப்.29) மாலை அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில், குமார் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டின் மின் ஒயர் அறுந்து தொங்கி உள்ளது. இதனை அறியாமல் வெளியே சென்ற குமாரின் கழுத்தில் அந்த மின் கம்பி பட்டுள்ளது. அதனை அவர் எதிர்பாராவிதமாக கையில் பிடித்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், குமாரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மயிலாடுதுறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.