நாகை மாவட்டம் கீழ்வேளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காரைக்காலில் இருந்து கடத்திவரப்படும் சாராயம் படு ஜோராக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி வறுமையின் காரணமாக கடந்த சனிக்கிழமை காவாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த சார்லஸ், தவமணி ஆகியோரிடம் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, சுதாகரிடம் சாராய பாக்கெட்டுகளை கொடுத்து விற்பனை செய்யுமாறு அவர்கள் கூறி உள்ளனர். இதற்கு சுதாகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் சார்லஸ் மற்றும் தவமணி உள்ளிட்ட சிலர், சுதாகரை 5 நாட்கள் கடுமையாகத் தாக்கி கொடுமை செய்துள்ளனர். அவர்கள் குடிபோதையில் சூடு வைத்தும், சித்திரவதை செய்தும் சுதாகரை வீட்டு வாசலில் தூக்கி வீசி சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் சுதாகரை மீட்ட உறவினர்கள், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்நிலையில், சாராய விற்பனை செய்யச் சொல்லி வற்புறுத்தி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக உறவினர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.