தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்குள்பட்ட கிழாய் ஊராட்சி மன்த் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரைவிட அதிமுகவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் எட்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பு, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே மறுவாக்கு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தார். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாலசுப்பிரமணியன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலர் அறையிலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுகவினருக்கு ஆதரவாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் செயல்படுவதாகவும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்றனர் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தேர்தல் அறையிலிருந்து வெளியேற்றினர்.
இதையும் படிங்க: ஒன்றியம் மாறிய மூன்று வாக்குச் சீட்டுகள்: வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைப்பு!