மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு நவகிரக புதன் தலத்தில் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் சாமி தரிசனம்செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், "மத்திய ஆளும் பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 303 பேர் இருப்பதால் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் நிறைவேற்றலாம் என்ற ஆணவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்.
கரோனா காலத்தில் மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுப்பது தவறில்லை. இதனை முன்கூட்டியே கொடுத்திருக்க வேண்டும். கரோனா காலத்திலேயே ஒரு குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கைவைத்திருந்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி வெற்றிபெற்றோமோ அதேபோல வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும், திமுக கூட்டணியுடன் இணைந்து காங்கிரஸ் பெரியளவில் வெற்றிபெறும்.
சரித்திர விபத்தால் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கிடையாது. இந்த அரசு கண்டிப்பாக மாற்றப்படும். புதிதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அரசு அமைக்கப்படும். இன்னும் மூன்று மாத காலத்தில் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்" என்றார்.