மயிலாடுதுறை: சீர்காழியைச் சேர்ந்தவர் மார்கோனி. இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதிமுகவில் அடிப்படை உறுப்பினரில் இருந்து பல்வேறு பொறுப்புகள் வகித்து மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி கட்சித் தலைமை, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக கூறி மதிமுக மாவட்டச் செயலாளர் மார்கோனியை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து மதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட மார்கோனி தலைமையில் சீர்காழி, மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த மார்கோனி ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மார்கோனி கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளாக கட்சியில் அடிப்படை உறுப்பினரில் இருந்து பல்வேறு பொறுப்புகள் வகித்து தற்போது மாவட்டச் செயலாளராக இருந்தேன்.
இந்த நிலையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக தலைமை அறிவித்தது. மாற்று கட்சி மாவட்டச் செயலாளர் ஒருவர் என்னை சந்தித்து பேசியதை தவறாக புரிந்து கொண்டு, வேறு கட்சியில் இணையப் போவதாக தவறான தகவல் தலைமைக்கு சிலர் தெரிவித்ததை கேட்டு, தலைமை என்னிடம் முழுமையாக விசாரிக்காமல் கட்சி பொறுப்பிலிருந்து திடீரென நீக்கிவிட்டனர்.
இதனிடையே கட்சி பொதுக்குழுவில் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ அனைத்து மாவட்டச் செயலாளர் மத்தியிலும் பேசிய கருத்துக்களை ஏற்க முடியாமல் நான் மட்டும் அக்கூட்டத்திலிருந்து வெளியேறினேன். துரை வைகோவின் செயல்பாடுகள் மதிமுகவினர் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. துரை வைகோவின் நடவடிக்கைகளை ஏற்க முடியாமல் மதிமுக அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகிறேன்” என்று கூறினார்.
மேலும், “வைகோவிற்குப் பிறகு, தான் லண்டன் சென்று செட்டில் ஆகி விடுவதாக துரை வைகோ தெரிவித்து இருந்தார். இந்த கட்சிக்காக 30 ஆண்டுகளாக தாங்கள் உழைத்து வரும் நிலையில், எந்த உழைப்பும் இல்லாமல் துரை வைகோ வாரிசு அரசியலில் பதவிக்கு வந்துள்ளார். நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மதிக்காத நிலைமை மதிமுகவில் நிலவுகிறது.
எனவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும்” அறிவித்தார். பின்னர் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் உள்ள மதிமுக கொடியினை பொறுப்பாளர்கள் அனைவரும் அகற்றினர். தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே மதிமுக சீர்காழி நகரச் செயலாளர் சத்தியராஜ்பாலு மற்றும் மயிலாடுதுறை, குத்தாலம் ஒன்றிய செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட 28 மதிமுக பொறுப்பாளர்கள் சீர்காழி நகர நிர்வாகிகள், 17 வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்தனர்.
இதையும் படிங்க: DIG Vijayakumar: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை!