மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெறும் தடுப்பூசி போடும் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கரோனா தடுப்பு மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆட்டோ ஓட்டுநர்கள், அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்காக நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை அவர்கள் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரோனா தடுப்பு மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் கூறியதாவது: ”பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இவற்றை மீறுவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் வேலை பார்க்கும் அணைவரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு சார்பில் வெளியிடப்படும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். பொதுமக்கள் கூட்டு முயற்சியுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்தால் மட்டுமே கரோனா தொற்று ஏற்படாமல் மீண்டு வரலாம்” என்றார்.