நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த திமுக கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மீது நாகப்பட்டினம் நகர அதிமுக செயலாளர் தங்க கதிரவன் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேடப்பட்டு வந்த தாமஸ் ஆல்வா எடிசனை நேற்று (செப் 23) சென்னையில் கைது செய்தனர்.
அதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரை கைது செய்த காவல்துறையை கண்டித்து நாகப்பட்டினம் அவுரி திடலில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேளாங்கண்ணி, கீழையூர், நாகை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, கைது செய்யப்பட்ட நிர்வாகியை விடுதலை செய்யவும், அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறவும் திமுகவினர் வலியுறுத்தினர். திமுகவினர் ஆர்ப்பாட்டம் காரணமாக மாவட்ட காவல்துறை சார்பாக வஜ்ரா வாகனங்கள், தடுப்புகள் அமைக்கப்பட்டு காவலர்கள் குவிக்கப்பட்டு இருந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: விஜயகாந்த் பூரண நலம்பெற முதலமைச்சர், துணை முதலமைச்சர் பிரார்த்தனை!