நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாமராமபுரம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நேற்று (பிப். 14) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், "மெட்ரோ திட்டம் கருணாநிதியின் கனவுத் திட்டம். சென்னை, தமிழ்நாட்டு மக்களுக்கு மெட்ரோ திட்டம் யார் தொடங்கியது என்று தெரியும். இன்னும் மூன்று மாதத்தில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. கோடிக்கணக்கான மக்கள் திமுகவை வரவேற்று, பழனிசாமியை நிராகரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
நியாயமான முறையில் வெற்றிபெற்று நேர்மையாக முதலமைச்சர் பதவியைப் பெறுவேன். நம்பிக்கை துரோகம் என்றால் பழனிசாமி பெயர்தான் எனக்குத் தோன்றுகிறது.
தேர்தல் நெருங்குவதால் இன்று (பிப். 14) பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். எங்களது கட்சி தமிழ்நாட்டில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக மோடியும் ஒரு ஷோ காட்டுவதற்காக வருகிறார்.
சென்னை வந்த மோடி ஊழல் கரைபடிந்த ஓபிஎஸ் & இபிஎஸ் ஆகியோரது கைகளைத் தூக்கிக் காட்டி அவர்களின் ஊழலுக்குத் தானும் உடந்தை என்று நிரூபித்துள்ளார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்த ஊழல் பட்டியலை ஆளுநரிடம் திமுக சார்பாக வழங்கியுள்ளோம். அடுத்த பட்டியல் தயாராகிவருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேவேந்திர குல வேளாளர் அரசாணை - சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு விழுக்காட்டில் கை கொடுக்குமா?