நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ரஜதகிரீஸ்வரர் கோவில், சுனாமி குடியிருப்பு நிலங்களை திமுக கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் கையகப்படுத்தி கொண்டதாக அதிமுக நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் நில அபகரிப்பு பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள தாமஸை தேடி வந்தனர். இந்நிலையில், தாமஸ் ஆல்வா எடிசன் சென்னையில் இருப்பதை அறிந்த நில அபகரிப்பு பிரிவின் தனிப்படை காவல் துறையினர் உடனடியாக சென்னை விரைந்தனர்.
அங்கு சட்டமன்ற உறுப்பினர் விடுதி அருகே தங்கியிருந்த தாமஸை அதிரடியாக கைது செய்தனர். இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தாமஸ் ஆஜர்படுத்தப்படும் சமயத்தில் நிச்சயம் நீதிமன்றத்தில் திமுகவினர் திரள்வார்கள் என்பதால், நாகை எஸ்பி அலுவலகம், நீதிமன்றம் வளாகம் முன்பு கலவர தடுப்பு வஜ்ரா வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு, அங்கு அதிவிரைவு படை காவல் துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாகையில் பரபரப்பு நிலவுகிறது.