மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர். அவ்வகையில் இன்று தனது 80 வயது பூர்த்தி அடைந்தை முன்னிட்டு, பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் மனைவி ஷோபாவுடன் சதாபிஷேகம் செய்து கொள்வதற்காக வருகை தந்துள்ளார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோயில் கொடிமரத்தின் அருகே எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் மனைவி ஷோபா கோ பூஜை, மற்றும் கஜ பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து 80 வயது பூர்த்தி ஆனதை முன்னிட்டு ஆயுள் விருத்தி வேண்டி 16 கலசங்கள் வைக்கப்பட்டு சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது.
விஜய்க்கு சிறப்பு அர்ச்சனை: அதனைத் தொடர்ந்து அவரது மகன் நடிகர் விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தார். தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் மனைவி ஷோபா ஸ்ரீ கள்ளவாரண விநாயகர், சுவாமி, அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் அபிராமி சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:பல "வாரிசு"களுக்கு மத்தியில் நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய்!