ஒரு தொழில் செய்யப் பணம் எவ்வளவு அவசியமோ அதேபோல விளம்பரமும் அவசியம். எந்தவொரு பொருளையும் நூதன விளம்பர யுக்தியின் மூலம் விற்பனை செய்து விடலாம். எந்தத் தொழில் செய்தாலும் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் விளம்பரம் செய்ய தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும். எந்த வயதினரையும் விளம்பரங்கள் மூலம் கவர முடியும்.
அப்படிபட்ட விளம்பரங்களைத் தற்போது தொழில் முனைவோர்கள் மிகவும் நூதனமாக கையாளுகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக நாகை வேளாங்கண்ணியிலுள்ள சலூன் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவர புதியதாக ஒரு விளம்பர யுக்தியைக் கையாண்டுள்ளார்.
எப்படியென்றால், அவர்களின் சலூன் கடைகளின் முன் தமிழ் முன்னணி நடிகர், நடிகைகளான ரஜினி, விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சினேகா உள்ளிட்ட பலருக்கு மொட்டை அடிக்கப்பட்டது போன்ற படங்களை கிராஃபிக்ஸ் செய்து, அதனை பேனர்களில் இடம்பெறச் செய்துள்ளனர்.
வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால், தினமும் அங்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு வருபவர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக தலைக்கு மொட்டையடித்து தலைமுடிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு அங்கு மொட்டையடிக்க வரும் நபர்களைக் கவர்வதற்கே இவ்வாறான விளம்பர பேனர்களை அவர்கள் வைத்துள்ளனர். எந்த ஒரு தொழிலிலும் வித்தியாசத்தை புகுத்தினால் வெற்றி பெறுவது எளிது என்பதற்கு, இவர்களின் இந்த முயற்சி எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: விடுமுறை என்றாலே வேளாங்கண்ணிதான் - சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்