1926ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்த இவர் விருத்தாசலம் தேவாரப் பாடசாலையில் படித்தார். தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்ற இவர், கௌரவப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தேவஸ்தான பொறுப்பில் அதிக நாட்கள் பணியாற்றிய இவர், கட்டளைத்தம்பிரான் சுவாமியாக சென்னை சமய பிரசார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
1971ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுரம் ஆதீனத்தின் 26ஆவது மடாதிபதியாக பதவியேற்றார். 49 ஆண்டுகள் மடாதிபதியாக பதவி வகித்து, வயது மூப்பின் காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில் இன்று அவர் இயற்கை எய்தினார். அவருக்கு ஆதீன முறைப்படி இறுதிச் சடங்குகள் நடக்க இருக்கின்றன. அவரது மறைவு பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமாக, திருக்கடையூர் வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆலயங்களும்; தமிழ்நாடு மட்டுமின்றி, காசி உள்ளிட்ட இடங்களிலும் நிலங்கள் உள்ளன. மேலும், பழமையான சைவ மட ஆதீனங்களில் ஒன்று தருமபுரம் ஆதீனம். இந்த ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 27 சிவாலயங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு குறித்து கே.எஸ். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'இந்தியாவின் பழமையான சைவ ஆதீனங்களின் ஒன்றான தருமபுரம் ஆதீனம் 26ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று மதியம் 2.40 மணிக்கு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். கதைசொல்லி இதழ், நிமிர வைக்கும் நெல்லை போன்ற என்னுடைய நூல்களைப் படித்து, என்னை அழைத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அன்பு பாராட்டியவர்.
தமிழ் மேல் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர். தமிழ் பக்தி இலக்கியத்தால் வளர்ந்ததைத் தெளிவாக அனைவருக்கும் எடுத்துச் சொல்லிய தருமபுர ஆதீனகர்த்தர் மறைவு வேதனையைத் தருகின்றது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நிலையில், தன்னுடைய சைவப் பணிகளோடு கல்விப் பணியையும் ஆற்றினார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:
'வைகோ மட்டும் தான் தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க அரசியல்வாதி' - அமைச்சர் செல்லூர் ராஜூ