ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இன்று இரண்டாவது சனிக்கிழமை என்பதால், அதிகாலை முதலே சென்னை, கடலூர், காஞ்சிபுரம், சேலம், திருச்சி உள்ளிட்ட வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகைதந்தனர்.
திருநள்ளாறுக்கு இன்று அதிக அளவில் பக்தர்கள் வருகைதந்துள்ளதால், சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கோயில் நிர்வாகமும், காவல் துறையும் பக்தர்களை தகுந்த இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நிற்கவைத்து, உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே வரிசையில் வளாகம் வழியாக தரிசனத்திற்கு அனுமதித்தனர்.
அதனைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் நெடு நேரம் காத்திருந்து பக்தர்கள் சனீஸ்வர பகவான் சந்நிதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். தொலை தூரங்களிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் கோயிலுக்கு வருகைபுரிந்துள்ளதால், அவர்கள் வந்த வாகனங்கள் அனைத்தும் பேருந்து நிலையம் எதிரே பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் நளன் குளத்தில் நீராட அனுமதி இல்லை என்பதால், அவர்கள் சாமி தரிசனம் மட்டுமே செய்துவருகின்றனர்.