சென்னை: மதகடி கிராம பஞ்சாயத்து தலைவரான டி. ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “மதகடி, தலைஞாயிறு பேருந்து நிறுத்தத்தில் கடந்தாண்டு டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கரின் நினைவு தினத்தை அனுசரித்தவர்கள், பிற சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதால் இரு சமூகத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நாளை (ஏப்.14) அம்பேத்கரின் பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் மீண்டும் அதேபோன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு காவல் துறை தரப்பில், மனுதாரர் குறிப்பிட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களை நாற்காலியில் அமர வைத்தவர் ஸ்டாலின் - திருமாவளவன் புகழாரம்