1968ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் அரைபடி நெல் கூலி உயர்த்தி கேட்டதால் ஆதிக்க சக்தியினரால், 44 விவசாய தொழிலாளர்கள் ஒரே குடிசையில் வைத்து தீயிட்டு கொளுத்தப்பட்டனர்.
வர்க்கப்போராட்டம் இந்தியாவைப் பொருத்தவரையில் சாதிய போராட்டமாகவே உள்ளது. இந்நிலையில், கீழ்வெண்மணி படுகொலையில் உயிர் நீத்த தியாகிகளின் 52ஆவது நினைவு தினம் இன்று (டிச.25) அனுசரிக்கப்பட்டது.
கீழ்வெண்மணி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், செங்கொடி ஏற்ற, நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், நாகப்பட்டினம் எம்பி செல்வராசு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வேளாண் சட்டங்களை நிறைவேற்றி விவசாயத்தை அழித்து, விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்க மத்திய அரசு முயல்கிறது. விவசாயிகளிடம் போராட்டத்தை நீர்த்து போகவே டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் பழனிசாமி குடும்ப அட்டைக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் என அறிவித்துள்ளார். கரோனா காலத்தில் நிதியுதவி செய்யாத மத்திய, மாநில அரசுகள் தற்போது, தேர்தல் வருகின்ற காரணத்தால் 2 ஆயிரத்து 500 ரூபாயை பொங்கல் பரிசாக அறிவித்துள்ளனர்" என விமர்சித்தார்.
மேலும், “கிராம சபை கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த கே.பாலகிருஷ்ணன், வழக்குப்பதிவு செய்தவர்களை கைது செய்ய தைரியம் இருக்கிறதா? சிறைச்சாலையில் இடம் இருக்கிறதா? என்றும் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, “மூன்றாவது அணி, நான்காவது அணி என எத்தனை அணி வந்தாலும் எங்கள் அணியை வெல்ல முடியாது. மோடி அரசை முறியடிக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு” என்றார்.
இதையும் படிங்க: ’அரசியல் நோக்கங்களுக்காக செயல்படும் கட்சியில் இருக்க முடியாது’ - மக்கள் நீதி மய்யத்தைத் தாக்கும் அருணாச்சலம்