இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டின மாவட்ட செயலாளராக சம்பந்தம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக சீனிவாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், " வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே, வேளாண் சட்டங்களால் பாதிப்பில்லை என்று முதலமைச்சர் தெரிவிக்கிறார். முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் மீண்டும் பொய் கூறுகிறார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய இந்த சட்டங்களுக்கு எதிராக வருகிற 14ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, நடைபெற இருக்கிற விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசு, கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்திய முத்தரசன், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பலமாக உள்ளதால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் 100 விழுக்காடு ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.