மயிலாடுதுறை: மயிலாடுதுறையை அடுத்த நல்லத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி(88) மற்றும் மருதாம்பாள்(83) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி கடந்த 50 ஆண்டுகளாக இல்லற வாழ்க்கையில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் இவர்களது அன்பின் அடையாளமாக 2 பிள்ளைகள் உள்ளனர்.
மேலும், கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடனும், அதீத பாசத்துடனும் இருந்து வந்துள்ளனர். திருமண நாள் முதல் எப்போதும் இருவருக்கும் இடையே பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் ஏதும் வந்தது கிடையாது என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். எங்கு சென்றாலும் தம்பதியினர் இருவருமே சென்று வருவதாகவும் கூறுகின்றனர். அந்த அளவுக்கு இணைபிரியாமல் தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனிடையே, கிருஷ்ணமூர்த்தி வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் (செப்.27) மதியம் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது கணவர் இறந்ததை தாங்க முடியாமல் அவரது மனைவி, தனது கணவனை எண்ணி அழுது கொண்டிருந்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அன்று இரவு கிருஷ்ணமூர்த்தியின் மனைவி மருதாம்பாள் கிருஷ்ணமூர்த்தியை வைத்திருந்த கண்ணாடி பெட்டியின் மீது மயங்கி விழுந்தார். அவரை தூக்கிய உறவினர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்ற போது அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. மரணத்திலும் இணை பிரியாத மூத்த தம்பதிக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.