இசையின் பெருங்கருணையே மனிதனின் சுக, துக்கங்களைப் பகிர்ந்துகொள்வதுதான். தமிழர்கள் பாரம்பரியத்தோடு ஒன்றியவர்கள் என்பதால், நவீன காலத்திலும்கூட அனைத்து சுபநிகழ்ச்சிகளிலும் நாதஸ்வரம், தவில் போன்ற இசைவாத்தியங்களின் முக்கிய இடம் அளிக்கின்றனர். அந்த மேலான சப்தத்தை நமக்களிக்கும் இசைக்கலைஞர்கள் ஊரடங்கில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஊரடங்கு காரணமாக, தற்போது கோயில் திருவிழாக்கள் ரத்து, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்த கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால், நாதஸ்வரம், தவில் இசைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் விளக்குகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "ஊரடங்குக்கு முன்பாக நிச்சயம்செய்யப்பட்டு, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் நடைபெறவிருந்த திருமணங்களுக்காக முன்பணம் கொடுத்து பதிவு செய்துகொண்டவர்கள் தற்போது பணத்தை திரும்பக் கேட்கின்றனர்.
கோயில்களில், பங்குனி உத்திரம், சித்திரை மாதத் திருவிழாக்களை ரத்துசெய்து, இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளதால், இசை வாத்தியங்களை மட்டுமே நம்பியிருக்கும் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்.
மங்கள இசை என்பது நாதஸ்வரம், தவில், ஒத்து, சுருதி இசைக்கலைஞர்கள் எனக் கூட்டாக இணைந்து நடத்தும் கச்சேரி என்பதால், ஒரு இசைக் கலைஞருக்கு ஏற்படும் பாதிப்புடன் இசைக்கும் பல கலைஞர்களின் குடும்பத்தையும் இணைந்தே வாட்டுகிறது.
இதேபோல், தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் வேலையின்றி தவித்துவருகின்றனர். இவர்களின் நலன்கருதி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்குவதுபோல, எங்களுக்கும் தனி நலவாரியம் அமைத்து, நிவாரணம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கைவிடுத்தனர்.
முன்னதாக, ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு, 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை அறக்கட்டளை நிறுவன தலைவர் குகேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரேநாளில் 7 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு