நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்தல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இருப்பினும், மயிலாடுதுறையில் கரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை சார்பில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கரோனா தொற்று கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
நகராட்சி ஆணையர் அண்ணாமலை, வட்டார மருத்துவ அலுவலர் சரத்சந்தர் தலைமையில் சேந்தங்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமை, மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா தொடங்கி வைத்தார். இதில், ஏராளமானோர் தகுந்த இடைவெளியுடன் பங்கேற்று பரிசோதனைகள் செய்துகொண்டனர்.
காய்ச்சல், இருமல், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட முதியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த முகாம் உதவும் என்றும், தொடர்ந்து இந்த முகாம் நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் இலவசமாக பொதுமக்களின் நலனுக்காக நடத்தப்படவுள்ளது என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.