நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 159 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 174ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா பரவல் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் நாகூர் குயவர் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அஞ்சல் நிலைய அலுவலர் (PostMaster) எஸ்தர் ராணி என்பவருக்கு ஏப்ரல் 1ஆம் தேதி கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அவருக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுவந்த நிலையில் நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் மருத்துவமனை செவிலியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செவிலியர் எஸ்தர் ராணியை பரிசோதித்துப் பார்க்கையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
அதே வார்டில் சிகிச்சைப் பெற்றுவந்த மற்ற நோயாளிகளுக்கும் தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதற்குச் சரியாக ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யாததே காரணம் என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இனி இதுபோல் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.