மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணி. இவர் கடந்த 20ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர், மகளின் வீட்டிலிருந்து தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்றுபார்த்ததும், பீரோவிலிருந்த 3 பவுன் நகை, 1500 ரூபாய் திருடுபோயிருப்பது தெரியவந்தது. மயிலாடுதுறையில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், அதே தெருவில் பல நாள்களாகப் பூட்டியிருந்த பாஸ்கரன் என்பவரின் பராமரிப்பில் உள்ள வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. வீட்டில், எதுவும் கிடைக்காமல் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.
அதேபோல, இன்று மாவட்டத்தில் செம்பனார்கோவில் காவல் சரகத்தில் உள்ள விளநகர் கிராமத்தில் 100 பவுன் நகை 10 லட்சம் ரூபாய் திருடுபோயுள்ளது குறிப்பிடத்தக்கது. உடனடியாக காவல் துறையினர் இரவு நேரங்களில் வாகன தணிக்கை, தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதனையும் படிங்க: ராகுலை மீண்டும் தலைவராக்க இளைஞர் காங்கிரஸ் தீர்மானம்