மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். ராஜகுமார், மயிலாடுதுறை தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.
அவருடன் காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர், அவரது மனைவி கௌவுல் ஆகியோர் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு செய்தனர்.
மயிலாடுதுறையில் வாக்குச்சாவடி எண் 1 சித்தமல்லி வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமி தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.
பூம்புகார் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், மாவட்டச் செயலாளருமான எஸ். பவுன்ராஜ் எம்எல்ஏ தனது சொந்த கிராமமான எடுத்துக்கட்டியில் உள்ள தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி எண் 276இல் தனது வாக்கினைப் பதிவுசெய்தார். பின்னர் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக உள்ளனவா என அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.