நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர், கார்த்திகேயன். இவர் நடுகடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது கடலில் மீன்பிடிக்க வந்த கீழமூவர்கரை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் தனது படகால் கார்த்திகேயனின் படகை மோதியுள்ளார். இதில், இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டு பேரும் தங்களது கிராமங்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, கரை திரும்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த கீழமூவர்க்கரையை சேர்ந்த மீனவர்கள் தங்களது கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் நடுகடலில் திருமுல்லைவாசல் மீனவர்களை தாக்குவதற்காக காத்திருந்தனர். இதனை அறிந்த திருமுல்லைவாசல் மீனவர்கள், கடலோர காவல் படை, காவல் துறையினர் துணையோடு நடுக்கடலுக்கு சென்றனர்.
இதனையறியாத கீழமூவர்க்கரை மீனவர்கள் தங்களுடன் எடுத்து வந்த பெட்ரோல் குண்டு, கற்களை எடுத்து வீசியுள்ளனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து படகில் காவல் துறையினர் இருப்பதை அறிந்த கீழமூவர்கரை மீனவர்கள் தப்பியோட முயற்சித்தனர். அப்போது ஒரு படகு கடலில் கவிழ்ந்துள்ளது. அந்த படகில் இருந்த கீழமூவர்க்கரையைச் சேர்ந்த மீனவர்கள் சுரேஷ், கெளசிக், சுகுமார், காசிராஜன் உள்ளிட்ட 4 பேரை காவல் துறையிர் கைது செய்து கரைக்கு அழைத்து வந்தனர்.
இந்த கைது நடவடிக்கையை அறிந்த கீழமூவர்க்கரை மீனவர்கள் உருட்டு கட்டையுடன் திருமுல்லைவாசல் கடற்கரை பகுதிக்கு வந்தனர். அங்கு நிறுத்தியிருந்த படகுகளை அடித்து நொறுக்கினர். இது அப்பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இது தொடர்பாக இரண்டு கிராமங்களுக்கு இடையே மேலும் தகராறு ஏற்படாமல் இருக்க அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சொத்து தகராறு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்