மயிலாடுதுறை: மயிலாடுதுறை கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர், கடந்த 10 ஆண்டுகளாக மயிலாடுதுறை நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மே 21ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஐப்பனுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் ஐப்பனுக்கு தொற்று உறுதியானது.
இதனையடுத்து ஐப்பன் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், இன்று (மே 26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூய்மைப்பணியில் ஈடுபட்டு வரும் பணியாளருக்கு நகராட்சி சார்பில் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என தூய்மைப் பணியாளர்கள் குற்றஞ்சாட்டினர். ஐயப்பனின் உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.