உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை ஆயிர்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரையில் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், நாகை மாவட்டம், மயிலாடுதுறை கோட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளிலுள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கரோனா தாக்கத்தால் வேலை இழந்து தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கூட வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பால் கூலி தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் குடும்பத்துடன் வீட்டில் முடங்கி உணவின்றி தவித்து வருகின்றனர். இதன்காரணமாக, குடும்ப வறுமையைப் போக்க பனைமரத்தின் பனநுங்கை வெட்டி சாலையோரங்களில் நின்று அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளிடம் விற்க வாகனங்கள் வருகையை எதிர்பார்த்து நாள்முழுவதும் கால்கடுக்க காத்து நிற்கும் நிலையுள்ளது.
சாலையில் வாகனங்கள் வருகையின்றி அவர்களுக்கு வருமானம் ஏதும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். ஆகையால், தமிழ்நாடு அரசு உடனடியாக கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க கூடுதல் நிவாரணம் அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பதநீர் விற்பனை பாதிப்பு - பனை மரத் தொழிலாளர்கள் வேதனை