மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, காழியப்பநல்லூர் ஊராட்சியில் உள்ள வார்டுகளில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி பிரச்சனை அவ்வப்போது இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அன்பு நகர்ப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அன்பு நகர்ப் பகுதியில் கடந்த பல மாதங்களாக ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாயில் குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனையடுத்து, குடிநீர் விநியோகம் செய்யக் கடந்த ஒரு ஆண்டாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலையினை உணர்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அதனைத் தத்ரூபமாக விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைத்தளங்களில் ஒரு வருடத்திற்கு முன் பதிவேற்றியுள்ளனர்.
இந்த வீடியோவில் 2002ஆம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவான் நடிப்பில் வெளிவந்த ரன் திரைப்படத்தில் காமெடி நடிகர் விவேக் சென்னையில் ஒரு குடிநீர் குழாயைத் திறந்து தண்ணீர் குடிக்கும் போது அந்த குடிநீர் குழாயில் தண்ணீர் வராமல் காற்று மட்டுமே வரும். இதை வைத்துப் பல வாகனங்களுக்குக் காற்று அடிக்கலாம் என்று கூறி விவேக் நகைச்சுவை செய்திருப்பார்.
இந்த காமெடி இன்றளவும் பல்வேறு இடங்களில் பேசப்பட்டு வருகிறது. இதேபோல், காழியப்பநல்லூர் ஊராட்சியில் மிதிவண்டியில் வரும் சிறுவர் ஒருவர் தனது மிதிவண்டிக்குக் காற்று இல்லாத நிலையில் அருகில் இருக்கும் குடிநீர் குழாயில் ட்யூப்பை இணைத்து மிதிவண்டிக்குக் காற்று பிடிக்கும் நிலையில் வீடியோ எடுக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ ஒரு வருடத்திற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த விடியோ வைரலாகி வருகிறது. ஆனால், தற்போது வரை அப்பகுதிக்கு முறையாகக் குடிநீர் வழங்கப்படவில்லை. இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: 40 வருடத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை.. ஐயப்ப பக்தரின் கண்ணீருக்கு காரணம் என்ன?