மயிலாடுதுறை: சீர்காழி தாலுக்கா தாண்டவன்குளத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியாகத சிறுமிக்கும் அவர்களது பெற்றோர்கள் ஏற்பாட்டின்படி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக மணமகன், மணமகள் ஆகிய இருதரப்பினரும் அழைப்பிதழ்கள் அச்சடித்து, உறவினர்களுக்கு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், திருமணம் நடைபெறவுள்ள பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்ற தகவலை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர்.
குழந்தை திருமணம்
இந்த புகாரின் அடிப்படையில் திருமணம் நடைபெறவிருந்த மண்டபத்திற்கு மண்டல துணை வட்டாட்சியர், சமுக பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நல அலுவலர், வட்டாட்சியர் சண்முகம், புதுபட்டிணம் காவல் துறையினர் ஆகியோர் வந்தனர்.
பின்னர், திருமணத்தை தடுத்து நிறுத்திய அலுவலர்கள், மணமக்களின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சான்றிதழ்கள் சரிபார்ப்பின்போது மணமகளுக்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் ஆறு மாதம் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து குழந்தை திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என இருவீட்டாருக்கும் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தைத் திருமணம்