தமிழ்நாட்டில் புதியதாக 11 மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக அண்மையில் மத்திய அரசு அனுமதியளித்தது. அதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் ரூ.367 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
367 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிக பிரமாண்டமாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரியில், 101 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனையும், 95 கோடியே 30 லட்சம் மதிப்பில் மருத்துவக் கல்லூரியும், 99 கோடியே 80 லட்சம் மதிப்பில் தங்கும் விடுதியும் என 24 கட்டடங்கள் அமைய உள்ளன.
ஆறு அடுக்குகள் கொண்ட மருத்துவமனைக் கட்டடம், மருத்துவக்கல்லூரி, அலுவலகங்கள், மாணவ மாணவியருக்கான விடுதிகள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகள், வங்கி, அஞ்சலகம், உடற்பயிற்சிக் கூடம், நவீனமயமாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பிணவறை என அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டு செயல்பட உள்ளது.
தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டமாக விளங்கக்கூடிய நாகப்பட்டினத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமையவிருப்பது இங்குள்ள மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 367 கோடி ரூபாய் மதிப்பில் நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை: முதலமைச்சர் அடிக்கல்