மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத் திருமடத்தில், தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து அருளாசி பெற்றார்.
இந்தச் சந்திப்பு குறித்து, தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்திதானம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மயிலாடுதுறை புதிய மாவட்டத்துக்கு ஆட்சியரகம் உள்ளிட்ட நிர்வாகக் கட்டடங்கள் கட்டவும், மருத்துவக்கல்லூரி அமைக்கவும் இடம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதீன திருமடத்துக்கு வந்தார்.
அவருடைய ஆட்சிக் காலத்தில் மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கனவான மயிலாடுதுறை புதிய மாவட்டம் அமைய ஏற்பாடு செய்ததற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம்.
திருநீற்றின் ஒளியைப் பரப்புவதே ஆதீனத்தின் கொள்கையும், ஞானசம்பந்தரின் அவதார நோக்கமும் ஆகும். அந்த வகையில், எப்போதும் திருநீறு பூசியிருப்பது குறித்தும், அவருக்கு பழனிசாமி என ஏன் பெயர் வந்தது என்பது குறித்து அவருக்குத் தெரிவித்தேன்.
அப்போது அவர் மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கு திருமுறைகளையும், ஆதீனத்தின் வெளியீடான திருக்குறள் உரையையும், பழனியாண்டவரின் திருவுருப்படத்தையும் வழங்கி ஆசி தெரிவித்தேன்" என்றார்.
இதையும் படிங்க: வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு