நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் ’ஜல்சக்தி அபியான்’ திட்டம் மூலம் மழைநீர் சேகரிப்பு, மரம் நடுதல், குளங்களை மேம்படுத்துதல், நீர் நிலைகளை சீரமைத்தல், நிலத்தடி நீரை தேக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டங்கள் குறித்து, செம்பனார்கோயில், முடிகொண்டநல்லூர், பரசலூர், திருச்சம்பள்ளி, கிடாரங்கொண்டான், காளஹஸ்தினாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய கண்காணிப்பு அலுவலரும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை செயலாளருமான டாக்டர் சஞ்சீவ் பட்ஜோஷி கூறுகையில், ”மழை நீரை சேகரிக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வயல்களில் குட்டைகள் அமைத்தும், குளங்களை சீரமைத்தும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தியும், பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பஞ்சாபில், ஆழ்துளைக் கிணறுகள் மூலம், மழை நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் நாகை மாவட்டத்தில் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டத்தில் பணிகள் சிறந்த முறையில் நடத்தப்பட்டுவருகிறது. இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் நாகை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை தீரும் என்று நம்புகிறேன்.
மாவட்டத்தில் அதிகளவில் ஆறுகள் உள்ள நிலையில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால், கடல்நீர் உட்புகுந்து, உப்புத்தன்மை அதிகரித்து வருகிறது. இது குறித்து, வல்லுநர் குழு உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.