நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாட்டின் இயற்கை வளம் கனிம வள பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, தினகரன் பேசுகையில், சுற்றுப்புறச்சூழல், இயற்கை வளங்கள், விவசாயத்தை பாதிக்கின்ற அனைத்து திட்டங்களையும் அமமுக எதிர்த்து நிற்கும். தமிழ்நாடு அரசு மழைநீரை சேமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீர் மேலாண்மைக்கான திட்டங்கள் அரசிடம் இல்லை என்று விமர்சித்தார்.
மேலும், மத்திய அரசு தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் இல்லை என்று சொல்லிவிட்டு, தற்போது, ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் மொழி, கல்வி முறையை பின்பற்ற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அறுதிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட காரணத்தால், தமிழர்களை வெளிநாட்டினரைப் போல் நடத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.