கர்நாடக அணையில் இருந்து விநாடிக்கு 2.5 லட்சம் கன அடி நீர் வரை திறக்கப்பட்டதால், மேட்டூர் அணை ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று 100 அடியை எட்டியது. இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10ஆயிரம் கன அடியாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. படிப்படியாக நீர் அதிகரிக்கப்பட்டு தற்போது விநாடிக்கு 65,000 கன அடி நீர்
வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு 27 நாட்கள் ஆகியும் கடைமடைப் பகுதிகளுக்கு நீர் வரவில்லை என விவசாயிகள் வேதனையடைந்தனர். கடந்த எட்டு ஆண்டுகளால் கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பொய்த்துப் போனது. தற்போது, மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டியுள்ள நிலையில் கடைமடைப் பகுதியான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடைந்தது.
மேலும், நாகை மாவட்ட எல்லைப் பகுதியான குறுக்கத்தி வடக்குவெளி கதவணைக்கு வந்த காவிரி நீரை பொதுமக்களும், விவசாயிகளும் மலர் மற்றும் நெல்மணிகள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். காவிரி நீர் கடைமடைப் பகுதிக்கு வந்துள்ளதால் 11 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெறும் எனவும், 13 லட்சம் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் வருவாய் பெறுவார்கள் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
அப்போது குறுக்கத்தி வடக்குவெளி அருகில் நின்றுகொண்டு பெரியோர்களும் சிறுவர்களும் காவிரி நீரை பெற்ற தாயை போல் வரவேற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.