நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள், வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள், குடிமராமத்துப் பணிகள், மதகுகளைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றது.
இந்தப் பணிகள் அனைத்தும் ஆளுங்கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணிகள் மெத்தனமாகவும், முழுமையாக தூர்வாராமலும் பெயரளவிற்கு கரைகளில் மண்ணை இழுத்துச் சரி செய்யும் பணிகள் மட்டுமே நடைபெறுகிறது.
இதன் காரணமாக கரைகள் பலவீனமடைந்துள்ள இடங்களில், வெள்ள காலங்களில் தண்ணீர் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து விவசாயி ராமலிங்கம் கூறியதாவது, 'மயிலாடுதுறை தொகுதியில் மல்லியத்தில் தொடங்கி, மணக்குடி வரை 24 லட்சம் மதிப்பீட்டில், காவிரி ஆறு 12 கிலோமீட்டர் தூரம் தூர்வாரப்பட்டு வருகிறது. ஆனால், தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. மேலும் தூர்வாரிய இடங்களில் ஒரு பகுதி மேடாகவும், ஒரு பகுதி பள்ளமாகவும் உள்ளது.
இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக மேம்போக்காக தூர்வாரிய இடங்களில், காவிரி ஆற்றை முழுமையாகத் தூர்வார வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர் பணியிட மாற்றம்; இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம்