மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்ட பட்டதாரி பெண் பிரியா பெரியசாமி (23) ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்று பொறுப்பு வகித்து வருகிறார். தொடர்ந்து திமுகவில் இணைந்தார்.
மன்னம்பந்தல் ஊராட்சி அலுவலகத்துக்கு தளவாட பொருள்கள் வாங்கியபோது ஊராட்சித் தலைவருக்கு ரோலிங் சோ் வாங்கியதற்கு ஊராட்சி துணைத் தலைவா் அமலா எதிா்ப்பு தெரிவித்ததாகவும், பட்டியலின பெண்ணுக்கு ரோலிங் சோ் எதற்கு என்று அமலாவின் கணவா் ராஜகோபால், பிரியா பெரியசாமியை பற்றி தரக்குறைவாக விமா்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், தொடர்ந்து ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் செய்வதற்கு உண்டான நிதியை பெறுவதற்கு கமிஷன் தொகை கேட்டு கையெழுத்திட மறுப்பதாகவும் குற்றம்சாட்டி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்து பிரியா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இச்சம்பவம் அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலைச் சிறுத்தை கட்சியினர் அங்கு கூடினர். பின்னர் பிரியாவிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை கூடுதல் இயக்குநர் விசாரணை செய்து துறை ரீதியாக நிதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மூன்று மணி நேரமாக நடத்திய போராட்டத்தைக் கைவிட்டு, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரியா புகார் அளித்தார்.
அதில், பட்டியலின பெண்ணான உனக்கெல்லாம் எதுக்கு ரோலிங் சேர் என்று கொச்சைப்படுத்தி கேவலமாக பேசி ஜாதியை குறிப்பிட்டு இழிவு படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.