மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நச்சினார்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் செல்லதுரை மகன் தீபக் (11). ஆறாம் வகுப்பு படித்துவந்த சிறுவன் திரௌபதி அம்மன்கோயில் பின்புறம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அருகில் உள்ள சிற்றாறு வடிகால் வாய்க்காலில் மணல் எடுத்த பள்ளத்தில் தீபக் விளையாடிக் கொண்டிருந்தபோது மண்சரிவில் சிக்கி படுகாயமடைந்தார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீபக்கை மீட்டு குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
வாய்க்காலில் அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் பள்ளத்தை மூடாததால் சிறுவன் உயிரிழந்ததோடு, இது குறித்து வருவாய்த் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில் பாலையூர் காவல் துறையினர் தீபக்கின் உடலை உடற்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.