இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி, தமிழ்நாடு அரசு செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் இன்று (ஜூலை 18) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளம்பர மற்றும் விழிப்புணர்வு பேருந்தினை மாவட்ட ஆட்சியர் லலிதா கொடியசைத்துத் தொடங்கினார்.
அப்போது அங்கு வந்த பாஜகவினர் செஸ் ஒலிம்பியாட் விளம்பரப் பேருந்தில் பிரதமர் மோடியின் படம் வைக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 'சர்வதேச செஸ் ஒலிம்யியாட் போட்டியானது, இந்தியா சார்பில் தமிழ்நாட்டில் நடைபெறும்போது பிரதமர் மோடியின் படத்தை விளம்பரப்பேருந்தில் வைக்காதது ஏன்?' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கிருந்த போலீசார் உடனடியாக அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ச்சியாக, முழக்கங்களை எழுப்பியவாறு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் கலை நிகழ்ச்சியுடன் சர்வதேச சதுரங்க போட்டி!