நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே குத்தாலம் வட்டத்தில் உள்ளது கோமல் கிராமம். பசுமை நிறைந்த இந்தக் கிராமத்தில் முதல்முறையாக இந்த ஆண்டு கடந்த 10 நாட்களாக குறிப்பிட்ட இனப் பறவைகள் ஆயிரக்கணக்கில் கூட்டம்; கூட்டமாக வந்து தஞ்சமடைகின்றன.
தினசரி மாலை 6 மணி அளவில் எங்கிருந்தோ வந்து, அப்பகுதியில் உள்ள தேக்கு, மூங்கில் மரங்களில் தஞ்சமடையும் அப்பறவைகள், விடியற்காலை 5 மணிக்கு இரைதேடி புறப்பட்டு விடுகின்றன. இப்பறவை கொக்கு, நாரை, மடையான் போன்ற தோற்றத்தில் இருந்தாலும், அளவிலும், நிறத்திலும் மாறுபட்டு உள்ளன.
வெண்ணிறத்தில் காணப்படும் இப்பறவைகள் கழுத்தின் மேல்புறத்திலும், மார்புப் பகுதியிலும் லேசான ஆரஞ்சு நிறத்திட்டுடன் காணப்படுகின்றன. இப்பறவைகள், பொதுவாக குளிர் பிரதேசங்களில் இருந்து இரைக்காகவும், இனவிருத்திக்காகவும் சாதகமான பகுதிகளை நோக்கி, பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து பறந்து வலசை வந்திருக்கலாம் என்றும்; தன்னுடைய இருப்பிட அழிப்புக் காரணமாக இயல்பான இடத்திலிருந்து புது இடமாக கோமல் கிராமத்தை தேர்ந்தெடுத்து இருக்கலாம் எனவும் கோமல் அரசுப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியராகப் பணிபுரியும் செந்தில் என்பவர் கூறுகிறார்.
இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பெரிய அளவிலான எலும்புக்கூடு