நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (வயது 31), செல்லச்செட்டி (வயது 42) ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பக்கத்து கிராமமான தாழம்பேட்டையில் இருந்து, பயன்படுத்தப்பட்ட பைபர் படகு ஒன்றை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்து மீன்பிடித் தொழில் செய்து வந்தனர். இவர்கள் கடந்த சில நாள்களாக மீன்பிடித் தொழிலுக்கு செல்லாததால், புதுப்பேட்டை கடற்கரை அருகில் தங்களது பைபர் படகை நிறுத்தி வைத்திருந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை மீனவர்கள் இருவரும் படகை வந்து பார்த்தபோது அதிலிருந்த வலைகள், என்ஜின் உள்ளிட்ட பொருள்கள் எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இது குறித்து உடனடியாக பொறையாறு காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். எரிந்த பைபர் படகு, வலை, என்ஜின் ஆகியவற்றின் மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தும் விசைப் படகு மீனவர்களுக்கும், பைபர் படகு மீனவர்களுக்கும் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், முன்விரோதம் காரணமாக படகு எரிக்கப்பட்டதா என்ற கண்ணோட்டத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.