நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குள்பட்ட தரங்கம்பாடி தாலுகா பகுதியில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்த குறைபாடு நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், தரங்கம்பாடி தாலுகா கிடாரங்கொண்டான் கிராமத்தில் ஒருங்கிணைந்த மின் மோட்டார் திட்டத்தின் கீழ் 4 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கிலோ வோல்ட் மின் திறனில் செயல்பட்டு வந்த துணை மின் நிலையம் 110/11 கிலோ வோல்ட் மின் திறனாக தரம் உயர்த்தப்பட்டு திறக்கப்பட்டது.
இதனை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். 110/11 கிலோ வோல்ட் மின் திறனாக தரம் உயர்த்தப்பட்டதால், செம்பனார்கோவில், பரசலூர், கீழையூர், பூம்புகார், மடப்புரம், மணிக்கிராமம் உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு தங்குதடையின்றி மின் வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் பயனடைவார்கள் என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது