மயிலாடுதுறை: சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதுச்சேரி மாநில மதுபானம் மற்றும் பாண்டி ஐஸ் எனும் பாண்டி சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இது குறித்து சில வாரங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர் ஒருவர் சாராய விற்பனை செய்யும் வியாபாரியிடம் சாராய விற்பனையைக் குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு அவர், தான் இது குறித்து காவல் துறையினரிடம் தெரிவித்த பின்னரே விற்பனை செய்வதாக கூறுவது போன்ற வீடியோ வைரலாகப் பரவியது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அதன் பின்னர் தொடர் விசாரணை நடத்தி சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 16 பேரை தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்குப் பணியிட மாற்றம் செய்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சாராய பிரச்னை அரங்கேறியுள்ளது.
சமீபத்தில் சீர்காழியில் வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. அதில், சீர்காழி காவலர் ஒருவர், பெண் சாராய வியாபாரி ஒருவரிடம் சாராயம் விற்பனை குறித்து பேசுவது போன்று பதிவாகியுள்ளது.
சாராய விற்பனையை கட்டுப்படுத்த பொதுமக்கள், காவல் துறையினருக்குப் பல நெருக்கடி கொண்டு வந்த போதிலும், காவல் துறையினரின் உதவியுடன் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச்சென்ற புது மாப்பிள்ளை வெட்டி கொலை; 5 பேர் கைது