மயிலாடுதுறை ஒன்றியம் சேத்தூர் ஊராட்சியில் பசுமை வீடு, ஐ.ஏ.ஒய்., பி.எம்.ஏ.ஒய்., திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக, அதே ஊராட்சியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தகவல்பெறும் உரிமை சட்டத்தின்கீழ் சேத்தூர் ஊராட்சியில் 2014 முதல் 2018 வரை பசுமை வீடு கட்டப்பட்டதற்கான பயனாளிகள் விவரங்களை கேட்டிருந்தார்.
ஒரு திட்டத்தில் பலன் பெற்ற பயனாளிகள் பெயரை மட்டும் தெரிவித்துவிட்டு மற்ற எந்த விவரத்தையும் அளிக்க அலுவலர்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து சட்ட விளக்கங்களை அளித்து மேல்முறையீடு செய்ததில், 18ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நேரில் வர சதீஷுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன் பேரில் அரிகிருஷ்ணன் என்பவருடன் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்ற சதீஷை, சேத்தூர் ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் குமார், அவரது உறவினர்கள் ஆனந்தராஜ், கண்ணன் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினுள் புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சதீஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை காவல்துறையினர், மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது: 24 மணி நேரத்தில் வழக்கை முடித்த காவலர்களுக்கு பாராட்டு!