நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டு துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் மீது நடுக்கடலில் நேற்றிரவு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை27) மீண்டும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல், ராமசாமி, சக்கரவர்த்தி ஆகிய மூன்று மீனவர்கள் மீதும், அடையாளம் தெரியாத மற்றொரு பைபர் படகில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி, மீனவர்களிடமிருந்த ஜிபிஎஸ் கருவி, மீன்பிடி வலை உள்ளிட்டவைகளை பறித்து சென்றுள்ளனர்.
இத்தாக்குதலை அடுத்து அவசர அவசரமாக கரை திரும்பிய மீனவர்கள், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வேதாரணியம் கடலோர காவல் படை காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இரவு 4 மீனவர்கள் மீது அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஓய்வதற்குள்ளாகவே, மீண்டும் நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.